திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே, மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் என்பவருக்கு சொந்தமாக சிக்கனூத்து கிராமத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், ஒரு மாதம் முன்பாக மூர்த்தியின் மூத்த மகன் மணிகண்டன் இந்த தோப்பில் தந்தையுடன் வேலைக்கு சேர்ந்துள்ளார். நேற்று மூர்த்தியின் தோட்டத்திலேயே மது அருந்திய மூர்த்தியின் மகன்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தோப்பின் மேலாளர் ரங்கசாமி குடிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கின்றார். தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், காவலர் அழகுராஜா, மேலாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பொழுது ரத்த காயத்தில் இருந்த மூர்த்தியை பார்த்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், மருத்துவ உதவி செய்ய 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்து இருக்கின்றார். ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சம்பவம் குறித்து விசாரித்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், இதுபோன்று சண்டையிட கூடாது என்றும், வாக்குவாதம் தவிர்த்து இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கின்றார். அப்பொழுது ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் தங்கபாண்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை இளநீர் வெட்டும் அரிவாளுடன் வெட்ட துரத்தி இருக்கின்றனர்.

சுமார் 50 மீட்டர் தூரத்தில் சண்முகவேலை மடக்கிப்பிடித்த மணிகண்டன், தங்கபாண்டி, மூர்த்தி மூவரும் சேர்ந்து சண்முகவேலை சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சண்முக பாண்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தப்பி ஓடி மூர்த்தி மற்றும் அவரது மகன்களான தங்கப்பாண்டி, மணிகண்டனைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை காத்திட உறுதியேற்போம்... கருணாநிதி நினைவு தினத்தில் சபதமேற்ற ஸ்டாலின்...!
திருப்பூரில் வைத்து தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய மற்றொரு மகனான தங்கபாண்டி இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மணிகண்டனை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் ஓரிடத்தில் வந்து பதுங்கி இருந்ததாகவும் அப்பொழுது பிடிக்கச் சென்ற போலீசாரை மணிகண்டன் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்ற போது போலீசார் சுட்டதில் சம்பவயிடத்திலேயே மணிகண்டன் பலியானார்.
உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: “நீயும் அவளும் லெஸ்பியனா?” - வாயில் மதுவை ஊற்றி பாலியல் டார்ச்சர்... புது மணப்பெண்ணை சல்லி, சல்லியாய் சிதைத்த கணவன்...!