திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திரைப்படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியிடுவது குறித்து மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத புதிய திரைப்படங்களைத் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
புதிய கட்டுப்பாடுகளின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வெளியாகும் திரைப்படங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும். அதன்படி, ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியான தேதியிலிருந்து 8 வாரங்களுக்குப் பிறகே (அதாவது 56 நாட்களுக்குப் பிறகு) மட்டுமே ஓ.டி.டி-யில் வெளியிட வேண்டும். இந்த முக்கியக் கட்டுப்பாட்டைச் சரியாகக் கடைப்பிடிக்கத் தவறும் திரைப்படங்களை, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று திருப்பூர் சுப்ரமணியன் எச்சரித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று காலத்திற்குப் பிறகு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான சில நாட்களிலேயே மிக விரைவாக ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்படுவது வழமையானது. இது திரையரங்குகளில் மக்கள் வந்து படம் பார்ப்பதைக் கணிசமாகக் குறைப்பதாகத் திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில்தான், திரையரங்குகளில் வசூலைப் பாதுகாக்கும் நோக்குடன், சங்கம் இந்தக் கடும் முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - சீனா மீண்டும் கைகோர்ப்பு! ஷாங்காயில் பிரமாண்ட தூதரகம் திறப்பு! புதிய அத்தியாயம் துவக்கம்!
மேலும், ஓ.டி.டி. வெளியீடு குறித்த அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய விதிமுறைகளைச் செயல்படுத்துவது குறித்த மேலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நயினாருக்கு இரண்டு முகம்!! கோட்சே பயிற்சி போல தமிழகத்தில் சதி! அப்பாவு வார்னிங்!