திருவள்ளூர் அருகே அடிக்கடி மின்வெட்டு பிரச்சனை கண்டித்து பொதுமக்கள் அரக்கோணம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருவள்ளூர் அடுத்த மப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி பேட்டை பகுதியில் சுமார் 600 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதியில் குறைந்த மின்னழுத்தமும் அடிக்கடி மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும், இதனால் கைக்குழந்தைகள் வைத்துள்ளவர்கள் கர்ப்பிணிகள் முதியவர்கள் இரவில் தூக்கமின்றி அவதியடைந்து வருகின்றனர். மின் மோட்டார் இயங்குவதற்கு மின்சாரம் இல்லாததால் குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
மேலும் பள்ளி மாணவர்கள் போதிய வெளிச்சம் இல்லாததால் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் முறையான தகவல் அளிக்காமல் புகார் சொல்லும் நபரின் தொலைபேசி எண்ணை பிளாக் செய்து விடுவதாகவும், ஆனால் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எந்தவித பாதிப்பும்
இல்லாமல் 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கொடுப்பதாகவும், குடியிருப்பில் வசிக்கும் தங்களுக்கு முறையான மின்சாரம் வழங்கப்படவில்லை என மக்கள்
கூறுகின்றனர்.
இதையும் படிங்க: சோலார் மின் உற்பத்தி..! சிலர் தூண்டுவதால் மக்கள் போராடுறாங்க..! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!
மின்சார பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஊராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர் மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று இரவு பூந்தமல்லி அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமர்ந்து நான்கு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் பூந்தமல்லி அரக்கோணம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலை மறியலில் கைவிடமாறு கூறிய போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகள் இரண்டு மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என உத்தரவாதம் அளித்ததால் நான்கு மணிநேர சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சனை கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வருகிறது. மின்வெட்டுப் பிரச்சினை கண்டித்து பல்வேறு இடங்களில் மக்கள் சாலை மறியிலும் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
மேற்கொண்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: சொந்த தொகுதியே இருண்டு போச்சு..! முதல்வர் விஜயை விமர்சித்த TTV தினகரன்..!