திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் மாட வீதியில், குபேர மூலையில் அமைந்துள்ள ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ பூத நாராயண பெருமாள் கோயிலில், புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன. நினைத்தாலே முக்தி தரும் இந்த புனித ஸ்தலத்தில், பெருமாள் குபேர வடிவில் காட்சி தருவதால், இங்கு வழிபடுவோருக்கு செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.புரட்டாசி மாதம் வைணவர்களுக்கு மிகவும் உகந்த காலமாகக் கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் உள்ள சங்கடங்கள் நீங்கி, நன்மைகள் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதன்படி, மாதத்தின் முதல் சனிக்கிழமையை ஒட்டி கோயில் நடை திறக்கப்பட்டு, காலையிலேயே சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு சந்தனாதி தைலம், மஞ்சள், பச்சரிசி, மாவு, பால், இளநீர், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சொர்ண அபிஷேகமும் நடைபெற்றது. பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, பெருமாள் பாசுரங்கள் ஒலிக்க, மகா கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.இதனைத் தொடர்ந்து குபேர வடிவிலான ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஏராளமான பக்தர்கள் காலையிலிருந்தே கோயிலுக்கு வந்து, அபிஷேகத்தையும் தீபாராதனையையும் பக்தியுடன் தரிசித்தனர். குபேர வடிவில் உள்ள மூலவர், செல்வத்தை அள்ளித் தருபவராகக் கருதப்படுவதால், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு செல்வம் பெருகும் என்ற ஐதீகம் உள்ளது.இந்தக் கோயிலின் வரலாறு குறித்தும் பக்தர்கள் பேசுகின்றனர். பகவான் கிருஷ்ணரை அழிக்க கம்சன் அனுப்பிய பூதகி என்ற அரக்கியை கிருஷ்ணர் வதம் செய்ததால், இப்பெருமான் பூத நாராயணன் என்று அழைக்கப்படுகிறார் என்பது தொன்மையான நம்பிக்கை.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு... குறைகளை கொட்டிய மக்கள்..!!
கோயில் சிறிய அமைப்பாக இருந்தாலும், அதன் பழமையும் ஆன்மீகச் சக்தியும் பக்தர்களை ஈர்க்கின்றன. மாட வீதியில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தில், கருடாழ்வாரும் காட்சி தருகிறார்.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். அபிஷேகம் பார்த்தாலே நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். அன்னப் பிரசாதமும் விநியோகிக்கப்படுவதால், கல்விச் செல்வமும் பொருளாதார வளமும் கிடைக்கும் என்று பலர் நம்புகின்றனர். கோயிலின் சூழல் பக்திப் பெருக்கத்தால் நிறைந்திருந்தது.
இதையும் படிங்க: 2 உயிரை துடிதுடிக்க கொன்று நர வேட்டையாடிய ‘ஆட்கொல்லி’ புலி சிக்கியது?... வனத்துறையினர் தீவிர நடவடிக்கை...!