வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கக்கூடிய நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு மின்வாரியம் பாதுகாப்புக்காக சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வடக் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.
அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலின் ஒரு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டது.
இதையும் படிங்க: வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள்; மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்... கனமழையால் கதறும் மக்கள்...!
இதனையடுத்து வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு துறையும் தயாராகி வருகிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தற்காலிக முகாம்ங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது. அதாவது டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்சார கேபிளோ பில்லர் பாக்ஸ் வைக்கப்பட்டிருக்கக்கூடிய இடங்களுக்கு அருகிலோ செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி இருக்கும் நீரில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.
எங்கேனும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும் தொடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது மின்வாரியம் . ஈரக்கைகளால் மின்சார சாதனங்களை இயக்க வேண்டாம். உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய மின்சார சாதனங்களை ஈரக்கைகளால் தொட வேண்டாம் என்றும் மின்வாரியம் அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது.
இதையும் படிங்க: மழை தீவிரம் அதிகமா இருக்கு… போர்கால நடவடிக்கை எடுங்க… EPS வார்னிங்…!