மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பிப்ரவரி 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மத்திய தொழிற்சங்கங்கள் (INTUC, AITUC, HMS, CITU உள்ளிட்டவை) இணைந்து அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகள் சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் தளவாடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

குறிப்பாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA), வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) போன்றவை வங்கித் துறையில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. பணப் பரிவர்த்தனை, காசோலை தீர்வு, டிராஃப்ட் வழங்கல் உள்ளிட்ட சேவைகளில் தாமதம் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
IDBI, பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பிற வங்கிகளும் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், ரிசர்வ் வங்கி இதை விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை; கிளைகள் திறந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்கப்படாது என்றாலும், பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான பணிகளை முடித்துக் கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
போராட்டத்தின் முக்கிய காரணம், மத்திய அரசு நவம்பரில் அறிவித்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) ஆகும். இவை 29 பழைய சட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டவை. ஆனால், தொழிற்சங்கங்கள் இவை தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் என்று குற்றம்சாட்டுகின்றன. தொழிற்சங்க பதிவு கடினமாக்கப்படுவது, நிர்வாகத்துக்கு அதிக அதிகாரம் கிடைப்பது, வேலை நிலைத்தன்மை குறைவது, எளிதில் ஊழியர்களை நீக்கும் உரிமை போன்றவை முக்கிய அச்சங்களாக உள்ளன.
வங்கித் துறையில் கூடுதலாக, வாரத்துக்கு ஐந்து நாள் வேலை (சனி-ஞாயிறு விடுமுறை), அதிகரித்த பணிச்சுமை, மன அழுத்தம், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலை, சம்பள முரண்பாடுகள் ஆகியவை போராட்ட கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலும் இந்த வேலைநிறுத்தம் தீவிரமாக நடைபெற உள்ளது. ஆனால், அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. "நாளை (பிப்ரவரி 12) பணிக்கு வராவிட்டால், ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்" என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே நோக்கம். 'நோ வொர்க் - நோ பே' விதி கண்டிப்பாக அமல்படுத்தப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளும் திமுக கட்சி இந்த நாடு தழுவிய போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
\
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து, மின்சார சட்ட திருத்தம் உள்ளிட்டவை தனியார்மயமாக்கத்துக்கு வழிவகுக்கும் என்று கடுமையாக விமர்சித்துள்ளது. இதனால், தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கும், மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டுக்கும் இடையே முரண்பாடு தென்படுகிறது. இந்த ஒருநாள் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டமாக இது கருதப்படுகிறது.
இதையும் படிங்க: "சென்னையில் பறக்கும் ரயில் இனி மெட்ரோ வசம்!" மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!