தமிழ்நாடு பொதுத்துறை ஆணையத்தின் (TNPSC) குரூப் 4 தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணிகளில் ஜூனியர் அசிஸ்டன்ட், டைப்பிஸ்ட், கிராம நிர்வாக அலுவலர் (VAO) போன்ற பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அதன்படி விஏஓ உள்பட பல்வேறு பதவிகளுக்கு என மொத்தம் 3,395 காலிப் பணியிங்களுக்கு நேற்று தேர்வு நடந்து முடிந்தது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி என்பதால் கடுமையான போட்டி இந்த தேர்வுக்கு உள்ளது. போட்டித் தேர்வில் தேவையான கட் ஆஃப் எடுத்தால் போதும். வேலை நிச்சயம் என்பதால் குரூப் 4 தேர்வை பல லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

அந்த வகையில் நேற்று நடந்த தேர்வில் மொத்தம் 13 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், 2 லட்சம் பேர் வரை ஆப்செண்ட் ஆனதாக தகவல் வெளியானது. வினாத்தாளும் கொஞ்சம் கடினமானதாக இருந்ததாக தேர்வர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக பொது அறிவு, தமிழ் போன்றவற்றில் மிகவும் நுட்பமான கேள்விகள் இடம் பெற்று இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: லீக்கானதா குரூப் 4 தேர்வு வினாத்தாள்..? டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வினாத்தாளில், தமிழக அரசின் திட்டம் தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. அதாவது, தமிழ்நாட்டில் விடியல் பயண திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?, மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்க எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறியுள்ளனர்.
குரூப் 4 தேர்வுகளில் தமிழக அரசின் திட்டங்களை பற்றிய கேள்விகள் இடம் பெற்று இருப்பது, திமுக அரசை விளம்பரப்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதாக ஒரு சிலர் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், அரசின் திட்டங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கேட்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் எனவும் இதை பேசுபொருளாக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சில கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, தமிழ்நாடு அரசின் கனவு இல்லத் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டம் சார்ந்த வினாக்கள், அகழ்வாராய்ச்சி குறித்து ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 3 வினாக்கள், இஸ்ரோ சார்ந்த ஒரு வினா, திராவிட மொழி சார்ந்த ஒரு வினா என பல கலவைகளை கொண்ட வினாத்தாளாக இது இருந்தது.
குரூப் 4 தேர்வு முடிவுகளும் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்து இருந்தார். ஆண்டு அட்டவணை படி சரியாக செயல்படுகிறோம் என்றும், குரூப்-2, 2ஏ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: வரும் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!