திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி இப்போது அதிகபட்சமாக ரூ.350 வரை விற்பனையாகிறது. பத்து நாட்களுக்கு முன்பு அதே பெட்டி ரூ.150-க்கு விற்கப்பட்ட நிலையில், விலை இரட்டிப்பாகியுள்ளது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.16-17 அளவில் இருந்தது இப்போது மேலும் அதிகரித்துள்ளது.
இது நுகர்வோருக்கு கவலையை ஏற்படுத்தும் அதே வேளையில், விவசாயிகளின் நிலைமை இன்னும் சிக்கலானதாகவே உள்ளது. மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி பரவலாக நடைபெறுகிறது. ஆனால் போதிய மழை இல்லாததால் பல இடங்களில் செடிகள் காய்ந்து வருகின்றன.
பொங்கலூர் பகுதியில் வைகாசி பட்டத்தில் நடப்பட்ட தக்காளி பத்து நாட்களுக்கு முன்பு அறுவடை சீசன் முடியும் நிலையில் இருந்தது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக புதிய நடவு செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்தது. வெயில் தாக்கம் காரணமாக விளைச்சலும் சரிந்தது. இதனால் சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து விலை உயரத் தொடங்கியது.
இதையும் படிங்க: அரிசி, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!
தற்போது சீசன் முடிவை நோக்கி செல்வதால் வரத்து மேலும் குறைந்துள்ளது. விளைச்சல் குறைவு, தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சீசன் முடிவு ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. மார்க்கெட்டில் தக்காளி அளவு தொடர்ந்து குறைந்தால் விலை மேலும் உயரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு பெரிய லாபத்தைத் தருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி இதுகுறித்து பேசும்போது, “தக்காளிக்கு நல்ல விலை கிடைப்பது தற்காலிக மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிட்டதால், பயிரைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு லோடு தண்ணீருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை செலவு செய்து லாரி மூலம் கொண்டுவந்து ஊற்ற வேண்டிய நிலை. கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதி தண்ணீருக்கான செலவிலேயே சென்றுவிடுகிறது. தக்காளிக்கு விலை கிடைத்தாலும், தண்ணீர் இல்லாமல் பயிரைக் காப்பாற்றுவது மிகப்பெரிய போராட்டமாக உள்ளது” என்றார்.
அவர் மேலும், தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் நீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் மற்றும் பாசனத் திட்டங்களை அரசு விரைந்து முழுமையாகச் செயல்படுத்துவதே என வலியுறுத்தினார். இந்தத் திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய நிலங்களுக்குத் தேவையான நீர் கிடைத்தால், நிலத்தடி நீரை மட்டும் நம்பியிருக்கும் நிலை குறையும். தண்ணீரை விலைக்கு வாங்கும் செலவும் குறையும்.
இதனால் தக்காளி உள்ளிட்ட பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். சாகுபடி பரப்பும் விரிவடையும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. தக்காளி விலை உயர்வு ஒருபுறம் விவசாயிகளுக்கு சில நிவாரணத்தைத் தருவதாகத் தோன்றினாலும், அவர்களின் உண்மையான வேதனை தண்ணீர் பற்றாக்குறையே.
நுகர்வோருக்கு விலை உயர்வு சுமையாக இருப்பதும், விவசாயிகள் உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாத நிலையும் தொடர்கிறது. ஒகேனக்கல் திட்டம் போன்ற நிரந்தரத் தீர்வுகள் விரைந்து செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த இருதரப்பு பிரச்சினைக்கும் நிவாரணம் கிடைக்கும் என்பதே விவசாய வட்டாரங்களின் கருத்து.
இதையும் படிங்க: சின்ன வெங்காய விலை 3 மடங்கு உயர்வு.. கோயம்பேட்டில் தட்டுப்பாடு உச்சத்தில்!! இல்லத்தரசிகள் கவலை..!!