தமிழ்நாட்டில் விவசாயப் பெருமக்கள் இரவு பகல் பாராது பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாகப் பாதுகாக்கத் துப்பில்லாமல், மழையில் நனையவிட்டு வீணாக்கும் தவெக கூட்டணி அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சி அமைந்தது முதலே நிர்வாகத் திறமையின்மையால் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முடங்கிக் கிடப்பதாகச் சாடி அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அனுபவமற்ற விளையாட்டுப் பிள்ளைகளால் நடத்தப்படும் இந்த பொய்க்கால் குதிரை அரசில், அப்பாவி விவசாயிகளுக்கு ஏற்படும் தொடர் இழப்புகளும் பாதிப்புகளும் சொல்லி மாளாத அளவுக்குப் பெருகிவிட்டன. காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லை அரசு உரிய நேரத்தில் விரைவாகக் கொள்முதல் செய்வதில்லை என்ற புகார்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.
அதேநேரத்தில், அரைகுறையாகக் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளைக் கூடப் பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளில் முறையாகப் பராமரிக்காமல், திறந்தவெளியில் மழையில் நனையவிட்டு முளைக்க வைக்கும் அநியாயம் தொடர்கிறது. எதிர்க்கட்சிகள் இதை அக்கறையோடு சுட்டிக்காட்டினால், தவறுகளைத் திருத்தாமல் வழக்கம் போலப் பிரச்னைகளைத் திசைதிருப்பும் மலிவான வேலைகளிலேயே தவெக அரசு ஈடுபடுகிறது என்று மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: ரீல்ஸ் மட்டுமே மூலதனம்.. இதை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்..!! தவெகவை விமர்சித்த இபிஎஸ்..!!

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவைச் சுட்டிக்காட்டிய அவர், கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 120 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் வெட்டவெளியில் பாதுகாப்பற்ற முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையின் போது, அவற்றுக்கு உரிய தார்பாய்கள் கூடப் போர்த்தப்படாததால் சுமார் 5 லட்சம் நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து முளைவிட்டு அழுகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இத்தகைய மழையில் நனைந்து நாசமான நெல்மணிகளை அரைத்து, புழுத்துப் போன தரமற்ற அரிசியாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி ஏழை மக்களின் தலையில் கட்டும் அவலம் இதன் மூலம் உருவாகும் என்று வேதனையுடன் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து தவெக ஆட்சியாளர்களின் போக்கைக் கண்டித்த அவர், சுய புத்தியும் இல்லாமல், மற்றவர்கள் சொல்லும் சொல் புத்தியையும் கேட்காமல் ஏனோதானோ என்று கண்மூடித்தனமாகச் செயல்பட்டு வரும் தவெக அரசு, தங்களின் அலட்சியப் போக்கால் ஒட்டுமொத்த விவசாயிகளையும், நியாயவிலைக் கடைகளை நம்பி வாழும் ஏழை எளிய மக்களையும் ஒரே நேரத்தில் வஞ்சித்து வாட்டி வதைக்கிறது.
இதற்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனியாவது விழித்துக் கொண்டு சேமிப்புக் கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகளைப் பாதுகாக்கப் போர்க்கால அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!