திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றிருந்த முதலீட்டுப் பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். வெளிநாட்டில் தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். அதேநேரம், உண்மையான புதிய முதலீடுகள் மாநிலத்திற்கு எப்போது வரும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
லண்டனில் ஆறு நாள் பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய் நேற்று சென்னை திரும்பினார். அரசு தரப்பில் மொத்தம் ரூ.15,300 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு முரணாக டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தப் பயணம் வெறும் ரீல்ஸ் எடுப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டதாகத் தோன்றுகிறது என்றார்.
முதலீட்டு சந்திப்புகள் குறித்த விரிவான தகவல்கள் இல்லாமல், சமூக ஊடகங்களில் மட்டும் பதிவுகள் வெளியானதாக அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதலீடுகளையே மீண்டும் அறிவித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். புதிய முதலீடுகள் வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. விரைவில் பிரியாணிக்கு நடவடிக்கை.. அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!!
திமுக ஆட்சியில் வெளிநாட்டுப் பயணங்களின் போது நாள்தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு, பத்திரிகையாளர்களுக்கு முழுமையான தகவல்கள் அளிக்கப்பட்டு, திரும்பியவுடன் முதலமைச்சர் நேரடியாக சந்திப்பது வழக்கம் என்று நினைவூட்டினார். ஆனால் இம்முறை முதல்வர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. அமைச்சர்களும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றார்.

ரூ.3,000 கோடி முதலீடு செய்வதாகக் கூறிய நிறுவனத்தின் பெயரே வெளியிடப்படாதது ஏன் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மதர்சன் நிறுவனத்தின் ரூ.11,000 கோடி முதலீடு ஏற்கனவே தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனம் சம்பந்தப்பட்டது என்றும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் சாதாரண மேலாளர் அளவிலானவர் என்றும் சுட்டிக்காட்டினார். எஃப்1 பந்தயக்களம் அமைக்க 2,000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்பதால், அது எங்கிருந்து பெறப்படும் என்பதை ஆவலுடன் பார்ப்பதாகக் கூறினார்.
ஹெல்மன் நிறுவனம் தொடர்பான முதலீடு மார்ச் மாதத்திலேயே முடிவாகியிருந்ததாகவும், வில்சன் ஏற்கனவே மாநிலத்தில் இயங்கும் நிறுவனம் என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடு வாழ் தமிழர்களைச் சந்திக்காதது, தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் பயணத்தில் இல்லாதது, முதலீட்டாளர் மாநாடு நடத்தாதது ஆகியவற்றையும் விமர்சித்தார். ஒரு பயணத்திலேயே இத்தகைய ஏற்பாடுகள் செய்ய முடியவில்லையெனில், எதிர்காலத்தில் எப்படி முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: பெண் நிர்வாகியின் பாலியல் புகார்! பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்! நயினார் நாகேந்திரன் அதிரடி..!