அமெரிக்காவுக்கு வெளியே வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை அமெரிக்காவில் ரிலீஸ் அல்லது திரையிடப்பட்டால் அதற்கு 100 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக வரி விதிப்பு விஷயங்களை மறந்திருந்த அதிபர் ட்ரம்ப் மீண்டும் புதிய வரிகளை விதிக்கத் தொடங்கிவிட்டார். அமெரிக்காவின் அதிபராக 2வது முறை பொறுப்பேற்றபின் அதிபர் ட்ரம்ப் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் உலக நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை விதித்து வருகிறார். இதில் சீனாவுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார்.
இதையும் படிங்க: வலுக்கும் வரி யுத்தம்: சீனா மீது மேலும் 50% வரி விதிப்பேன்.. அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!
அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு அதிக வரியும், குறைவான வரிவிதிக்கும் நாடுகளுக்கு குறைந்தவரியும் அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி விதித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரிவிதிப்பை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் நேற்று சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்ட செய்தியில் “அமெரிக்க திரைப்படத்துறை வேகமாக அழிந்து வருகிறது. மற்ற நாடுகள் திரைப்படங்கள் தயாரிப்பதற்கும், படப்பிடிப்புநடத்தவும் ஏராளமான சலுகைகளை வழங்குவதால், அமெரிக்கத் தயாரிப்பாளர்கள் அங்கு செல்கிறார்கள், திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். ஆனால், அமெரிக்காவில் திரையிடுகிறார்கள்.
இது மற்ற நாடுகளுக்கு நன்றாக இருக்கும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். ஆதலால் அமெரிக்க வர்த்தகத்துறை உடனடியாக பரிசீலித்து, அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்பட்டு, அதை அமெரிக்காவில் திரையிட்டால் 100 சதவீதம் வரிவிதிக்கும் திட்டத்தை பரிசீலிக்கலாம். அமெரிக்காவில் திரைப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் கூறுகையில் “நாங்கள் வரிவிதிப்பை பரிசீலித்து வருகிறோம். அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பு குறித்து கூறியுள்ளார். வரிவிதிப்பு என்பது திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கா, அமெரிக்க அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கா அல்லது வெளிநாடுகளில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கா என்று தெரிந்து கொண்டபின் வரிவிதிப்பு அமலாகும்” எனத் தெரவித்தார்.
அமெரிக்காவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கப்படுவது கடந்த 10 ஆண்டுகளில் 40 சதவீதம் குறைந்துவிட்டது என ஹாலிவுட் குறித்து ஆய்வு செய்யும் பிலிம்ஏ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 1000 வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து.. அதிபர் ட்ரம்ப் முடிவு..!