தமிழகத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள், கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தொடக்கப் பணிகளைத் தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, இன்று (டிசம்பர் 7) திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அமமுகவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனுக்கள் வரும் டிசம்பர் 10ஆம் தேதி முதல் பெறப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஜனவரி 3ஆம் தேதி வரை பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டிதான் இருக்கும் என்று டி.டி.வி. தினகரன் சூளுரைத்தார். "நான் சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் தினகரன் 5வது அணி அமைப்பாரெனப் பேசினார்கள். ஆனால் அது உண்மை இல்லை," என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தங்கள் கூட்டணி வெற்றியை நோக்கி அணிவகுக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: விஜய் பொதுக்கூட்டம்: அனுமதி மறுக்கப்படவில்லை; மாற்று இடத் தேர்வு: தவெக விளக்கம்!
தங்கள் கூட்டணிக்குத் தலைமை ஏற்று இருக்கும் சில கட்சிகள் தங்களோடு பேசி வருவதாகவும், பேச்சுவார்த்தை இறுதி வடிவம் அடைந்த பிறகு உறுதியாக அறிவிப்பதாகவும் அவர் கூறினார். கூட்டணி அமைப்பதற்குத் தங்களுக்கு எந்த நிபந்தனையும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுக ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்துச் செல்ல முடியும் என்றும், சட்டமன்றத் தேர்தல் முடிவிற்குப் பிறகு தூங்கிக்கொண்டிருப்பவர்கள், தூங்குவது போல் நடிப்பவர்கள் ஒருங்கிணைவார்கள் என்றும் அவர் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்தது அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக-வில் மூத்த தலைவர்கள் இணைந்து வரும் சூழலில், தவெக மற்றும் அமமுக கூட்டணி அமைக்கும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போதிய வசதிகள் இல்லை: விஜய் பங்கேற்கும் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட எஸ்.பி. அனுமதி மறுப்பு!