தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னை ராமபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்டார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'இரட்டை இலை' சின்னத்திற்காக அவர் வாக்கு சேகரித்தது அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டை இலை சின்னத்திற்காக மக்களிடம் வாக்கு கேட்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்ந்த புனிதமான ராமபுரம் இல்லத்தில் இருந்து இந்தப் பணியைத் தொடங்குவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் நிலவும் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒரு அமைதிப் புரட்சியைச் செய்து வருகின்றனர். இந்த ஆட்சி மீதான கோபம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும். அந்தப் புரட்சியின் முடிவு என்ன என்பது வரும் மே மாதம் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது அனைவருக்கும் தெரியவரும் எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிங்க: சீர்காழி தேர்தல் பரப்புரை: நான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை! முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிமிக்க பேச்சு!
தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தமிழகத்தின் நலனுக்காகவும், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்துள்ளதாலும் இந்தக் கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நாங்கள் புதிய மாற்றத்தை உருவாக்குவோம் என்றார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தனது தேர்தல் வாக்குறுதியை நினைவு கூர்ந்தார்.
ராமபுரத்தில் திரண்டிருந்த ஏராளமான அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் 'இரட்டை இலை' சின்னத்தை ஏந்தி உற்சாகமாக முழக்கமிட்டது, அத்தொகுதியில் தேர்தல் அலை வீசுவதை உறுதிப்படுத்தியது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள்! இறுதி மற்றும் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் வெளியீடு!