அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் பதவி நான்கு மாதங்களுக்கும் மேலாகக் காலியாக வைக்கப்பட்டிருப்பதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் தவெக அரசு காட்டும் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்வளப் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்குத் தகுதியும் அனுபவமும் வாய்ந்த நபரை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்ட பின்னரும் உரிய நியமனத்தை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் தவெக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அவர் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே அப்பதவியில் பணியாற்றி வந்த பொறியாளர் கடந்த ஜூன் மாதமே ஓய்வுபெற்ற நிலையில் நான்கு மாதங்களுக்கு மேலாகியும் தகுதியான நபரைத் தேர்வு செய்து நியமிக்க முடியாமல் இருப்பது தவெக அரசின் நிர்வாகத் திறனை மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்தும் கேள்விகளை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா, பரம்பிக்குளம்-ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் விவகாரங்களில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிய நீரைப் பெற்றுத்தருதல், தமிழகத்திற்கு வரும் நீரின் அளவைத் தொடர்ந்து கண்காணித்தல், தொழில்நுட்பத் தரவுகளை ஆய்வு செய்தல், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் பங்கேற்று தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் வலுவான வாதங்களை முன்வைத்தல் ஆகிய முக்கியப் பணிகளில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவரின் பங்கு இன்றியமையாதது என அவர் விளக்கினார்.

இத்தகைய முக்கியப் பதவியை நிரப்புவதிலேயே மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கும் தவெக அரசு தமிழகத்திற்கான உரிமை நீரைப் பெற்றுத்தருவதில் எந்த அளவுக்கு அக்கறையுடன் செயல்படும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். நதிநீர் விவகாரங்களில் அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடனும் மாநிலத்தின் பாசனத் தேவைகளுடனும் நேரடியாகத் தொடர்புடைய சூழலில் இந்தப் பதவியைக் காலியாக வைத்திருப்பது மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதை தவெக அரசு உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ரூ.30க்கு ரேஷன் அரிசியை விற்பதா.? நூதன முறையில் ஏமாற்றும் தவெக அரசு..! டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு.!!
தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் காலதாமதமின்றி தகுதியும் அனுபவமும் வாய்ந்த நபரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே நியமனம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதன் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் தவெக அரசை அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வெற்றிப் பயணத் திட்டம்..! "அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்"..! TTV தினகரன் விளாசல்.!!