சட்டமன்றத்தில் முதலமைச்சர் தன்னை விவசாயிகளின் காவலராக முன்னிறுத்த முயன்ற அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தின் முன் போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். தவெக அளித்த தேர்தல் அறிக்கையின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக போராட முயன்ற விவசாயிகள், காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறினார்.
காவிரி நீர் நமது உயிர் ஆதாரம் என்றும் அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியளவும் இல்லை என தன்னை விவசாயிகளின் காவலர் என காட்டிக் கொள்வது போல முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டமன்றத்திற்குள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சட்டமன்றத்திற்கு வெளியே ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரை வைத்து அடக்கி ஒடுக்கியிருப்பது, விவசாயிகள் நலனில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றார்.
இதையும் படிங்க: “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு, அரசின் கவனத்தை ஈர்க்க சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு இல்லாமல் ஏமாற்றப்பட்ட விவசாயிகள், வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி தலைமைச் செயலகத்தையே முற்றுகையிட்டு போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக டிடிவி தினகரன் கூறினார்.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!