இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லை, சர்வதேச கடல் எல்லைக் கோடு மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் வெறும் 12 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதி மீன்வளம் மிக்கது என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்கிறது, அவர்களின் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்கிறது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல் எல்லையான பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வழக்கமாகி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்ய ப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருநாட்டினரும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். 35 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிகழ்வு மன வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: ஆட்டத்தை தொடங்கிய தவெக... அதிரடி காட்டும் விஜய்... மகளிரணி நிர்வாகிகள் நியமனம்...!
அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறினார். மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும் என்றும் இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனவும் விஜய் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சிபிஐ அடுத்த கட்ட நகர்வு... பனையூருக்கு விரையும் அதிகாரிகள்... சூடு பிடிக்கும் விசாரணை...!