சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே 66 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி கீழே தள்ளி போதையில் இளைஞர்கள் அவரின் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மூதாட்டி கத்தி கூச்சல் போட்டதால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி சேலம் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே மூதாட்டியிடம் அத்துமீறிய இரண்டு பேரில் ஒருவரான ரவிக்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பிச்சென்ற மற்றொரு நபரை பிடிக்க போலீசார் முனைப்பு காட்டியுள்ளனர். விளாத்திகுளத்தின் அலறல் அடங்குமுன் அடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது என்றும் தமிழகத்தின் அமைதி மாவட்டமாக அறியப்படும் சேலத்தில், 65 வயது மூதாட்டி ஒருவரை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது எனவும் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

தாயுள்ளம் கொண்ட ஒரு மூதாட்டிக்கு நேர்ந்த இந்த இழிவான செயல், ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளது என்றும் இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளின் மனமே திமுக அரசின் ஐந்தாண்டு அடையாளம் எனவும் கூறியுள்ளது. "விடியல் தருவோம்" என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று முதியோர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற ஒரு இருண்ட சூழலை உருவாக்கியுள்ளனர் என்றும் பட்டப்பகலில் வழிப்பறி, தொடர் கொலைகள் எனத் தொடங்கி, தற்போது 60 வயதைக் கடந்த மூதாட்டிகளைக் கூட விட்டுவைக்காத அளவிற்கு குற்றவாளிகள் துணிச்சலுடன் வலம் வருவது மட்டுமே திமுகவின் சாதனை எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: NDA கூட்டணியில் விஜய்... - END கார்டு போட்ட தவெக... பரபரக்கும் அரசியல் காரணங்கள்...!
இந்தக் குற்றச் செயல்களின் பின்னணியில் தமிழகத்தில் தடையின்றிப் புழங்கும் போதைப் பொருட்களின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது என்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தத் தவறியது இந்த அரசின் மிகப்பெரிய நிர்வாகத் தோல்வி எனவும் கூறியது. போதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்கள் தங்களின் நன்னெறியைத் தொலைத்துவிட்டு, இது போன்ற மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுவது சமூகச் சீரழிவிற்கு வழிவகுக்கிறது. காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர், விளம்பரங்களில் காட்டும் கவனத்தை மக்களின் பாதுகாப்பில் காட்டத் தவறிவிட்டார் என்றும் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: NDA கூட்டணியில் விஜய்? அதிமுகவுடன் பேச்சுவார்த்தை? தவெகவின் முக்கிய விளக்கம்..!!