தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக நாளை (மார்ச் 4) முதன்முறையாகத் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். கட்சியைத் தொடங்கிய பிறகு தஞ்சை மண்ணிற்கு அவர் வருவது இதுவே முதல்முறை என்பதால், ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத் த.வெ.க நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வரும் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தஞ்சாவூர் வந்தடைகிறார். தஞ்சை மண்ணில் அவர் முதன்முறையாகக் கால் பதிப்பதைக் கௌரவிக்கும் வகையில், மாவட்ட எல்லை முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில், தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து அவர் இதில் முக்கிய உரையாற்ற உள்ளார்.
இதையும் படிங்க: சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

இந்த பிரம்மாண்ட சந்திப்பு நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்டப் பணிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்களான செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர். மேடை அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், தொண்டர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் குறித்து அவர்கள் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்து வரும் சூழலில், தனது ஆளுமையை நிரூபிக்கும் வகையில் இந்தத் தஞ்சை வருகையை விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி தஞ்சை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சை மண்ணின் விவசாயப் பிரச்சனைகள் மற்றும் காவிரி விவகாரம் குறித்து விஜய் தனது பேச்சில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவாரா என்பதை அறிய ஒட்டுமொத்தத் தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிடக்கூடாது..!! விஜய்-சங்கீதா DIVORCE விவகாரத்தில் நடிகை குஷ்பு பரபரப்பு கருத்து..!!