தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவுடன் தொடர்புடையது. சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படும் வகையில் இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரில், முக்கிய இணைப்பாளராகக் கருதப்படும் லட்சுமண பெருமாள் என்பவருக்கு சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சிங்கப்பூரில் இருந்தபடியே இவர் ஆதாரங்களை அழித்துவருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கின் தொடக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை தொடர்புகொண்ட திருநாவுக்கரசு என்பவர், ஒரு முக்கிய கட்சியைச் சேர்ந்த சிலரின் சார்பாக பேசுவதாகக் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினரான இளையராஜா அந்த வாக்கெடுப்பில் ஆதரவாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் கோரியதாகத் தெரிகிறது. இதற்கு ஈடாக 35 கோடி ரூபாய் சன்மானம் தரப்படும் என ஆசை காட்டியதாக இளையராஜா புகார் அளித்தார். மேலும், தனது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் உள்ளிட்டோரை கைது செய்தனர். விசாரணையில் திருநாவுக்கரசு அளித்த ஒப்புதல் வாக்குமூலம் முக்கியமான தகவல்களை வெளியிட்டது. எம்எல்ஏவுக்கு 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், தனக்கு 5 கோடி ரூபாய் கமிஷன் பேசப்பட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த பேரத்தின் பின்னணியில் லட்சுமண பெருமாள் முக்கிய பங்கு வகித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஓட்டுக்காக மாநில வளர்ச்சியை பலியிடலாமா.? சொல்லுங்க அமைச்சரே..! நயினார் சரமாரி கேள்வி..!!
லட்சுமண பெருமாள் சிங்கப்பூரில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. தொலைபேசி எண்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் அவரை அடையாளம் கண்ட காவல்துறையினர், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். சிங்கப்பூரில் இருந்தபடியே இவர் ஆதாரங்களை அழித்து வருவதாகவும், நாட்டை விட்டு தப்பியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லட்சுமண பெருமாள் முக்கிய நபராக உருவெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக, அதிமுக அகம்பாவம் அழிச்சி போச்சி... உச்சக்கட்ட கொக்கரிப்பில் உயர் கல்வித்துறை அமைச்சர்...!