நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் எனத் தமிழக வெற்றிக் கழகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகக் காரசாரமான அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுப் பாடப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் சார்பில் மிகக் கடுமையான கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி, கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம். யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பச்சையப்பாஸ் மாணவர்கள் மீது வெறியாட்டம்..! சென்ட்ரல் மெட்ரோவில் பரபரப்பு..! நயினார் சரமாரி விமர்சனம்..!
தமிழைப் புறந்தள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராகத் தவெக உறுதியோடு போராடும் என்றும், மொழி உரிமையைப் பாதுகாக்கச் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் பின்வாங்க மாட்டோம் என்றும் அக்கட்சி எடுத்துள்ள இந்த அதிரடி நிலப்பாடு, தமிழக அரசியல் காய்நகர்த்தல்களில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: “எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது”... மண் கடத்தலை தடுத்த மக்களுக்கு மிரட்டல்... தவெக ஒன்றிய செயலாளர் அட்டூழியம்...!