மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, செப்டம்பர் 17 அன்று காலை 7:40 முதல் 8:10 மணி வரையிலான சுப முகூர்த்தத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வரலாற்று நிகழ்வு நடைபெறுவதால், தமிழகம் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்து சுமார் ஏழு லட்சம் பக்தர்கள் மதுரையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் இந்த விடுமுறை பொருந்தும்.
ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த காலாண்டு மற்றும் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 18 முதல் தொடங்கும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விடுமுறையை ஈடுசெய்ய அக்டோபர் மாதத்தில் வரும் இரு சனிக்கிழமைகள் வேலை நாட்களாகவும், செப்டம்பர் 24 பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் செப்டம்பர் 6 முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி, 12 கால யாக வேள்விகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: மதுரை விழாக்கோலம்..! மீனாட்சியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம்.. கட்டண தரிசனம் ரத்து..!!

காசி கங்கை நீர் மற்றும் ஏழு புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரும் இந்தச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மகா கும்பாபிஷேகத்தின் போது முதலில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமிகளின் தங்க விமானங்களுக்கும், அதைத் தொடர்ந்து ராஜ கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு விழா இனிதே நிறைவேற்றப்படும்.
நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 6,000 பணியாளர்கள் நிகழ்வுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். தற்காலிகப் பேருந்து நிலையங்கள், சிறப்புப் போக்குவரத்து வசதிகள், 8,000-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கான நிறுத்துமிடங்கள், குடிநீர் குழாய்கள் மற்றும் தற்காலிகக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
200-க்கும் மேற்பட்ட முக அடையாளக் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்கவுள்ளது. லேட் திரைகள் வழியாக நேரடி ஒளிபரப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மீனாட்சி அம்மனின் அருளைப் பெற லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: மீனாட்சியம்மன் கும்பாபிஷேகம்: எதற்கொல்லாம் தடை விதிப்பு?... அதிரடி கட்டுப்பாடுகள் என்னென்ன?