தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100 அடி கொடி கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பாரதத்தில் நடப்பட்ட 100 அடி கொடி கம்பம் எதிர்பாராத விதமாக சாய்ந்தது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கொடிக்கம்பம் விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. கொடிக்கம்பம் சாய்வதை சுதாரித்துக் கொண்ட அருகில் இருந்தவர்கள் விலகிச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: 'வாகைசூடும் வரலாறு திரும்புகிறது'.. தெறிக்கவிடும் தவெக மாநாட்டின் கட்அவுட்.. இனி ஆட்டம் வெறித்தனம்தான்..!!
ஒரே ஒரு கிரேன் மூலம் சிங்கிள் பெல்ட் உதவியோடு கொடிக்கம்பத்தை ஏற்ற முயன்றதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாட்டின் குறைபாட்டால் தான் இவ்வாறு நிகழ்ந்துள்ளதாகவும், போலீசாரின் பாதுகாப்பு இல்லாமல் கொடி நடு நிகழ்வு நடந்ததாகவும் கூறப்படுகிறது. கொடிக்கு நான்கு போல்ட் இருக்கும் நிலையில் இரண்டு போல்ட் ஏற்கனவே போட்டு விட்டதால் கொடிக்கம்பம் பொறுமையாக சரிந்ததாகவும், இதனால் அருகில் இருந்தவர்கள் தப்பி ஓடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததாகவும் அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
யாரும் இல்லாத காரில் சரிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், கொடிக்கம்பம் விழுந்த காரின் பக்கத்தில் இருந்த மற்றொரு காரில் 5 பேர் இருந்ததாகவும் எதிர்பாராமல் அதில் விழுந்து இருந்தால் ஐந்து பேர் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்றும் அச்சத்தை வெளிப்படுத்தினர்.