தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். கரூர் சம்பவம் நிகழ்ந்த உடன் விஜய் சென்னைக்கு திரும்பினார்.
இதுவரை அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்றும் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. துயரச்சம்பவம் நிகழ்ந்தும் இதுவரை மக்கள் பற்றி கவலைப்படாத விஜய் அரசியல் தலைமைக்கு ஏற்றவர் கிடையாது என்றும் பகிரங்கமாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. அசம்பாவிதம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக தான் விஜய் உடனடியாக சென்னைக்கு திரும்பியதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில், விஜய் விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கான முழு ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தி உள்ளதாகவும் கட்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர்கள் மீதான வழக்கில் சட்ட உதவிகளை செய்யவும் விஜய் அறிவுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெக அடாவடி..! சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்… மாவட்டச் செயலாளரின் முன் ஜாமீன் தள்ளுபடி…!
கரூர் செல்ல வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாகவும் அதற்கான பணிகளை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி! விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு... தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!