நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற பெயரில் தனது அரசியல் கட்சியை 2024 பிப்ரவரி 2-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்து தொடங்கினார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, குறிப்பாக அவரது ரசிகர் பட்டாளத்தால். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, விஜய் கட்சியின் அடித்தளப் பணிகளை தீவிரப்படுத்தினார். இதற்காக, கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்கவும் முடிவு செய்தார்.
இதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கு சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு, சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் கட்சியில் இணைந்தனர். ஒரு கட்டத்தில், சர்வர் பிரச்னைகளால் உறுப்பினர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், பின்னர் மீண்டும் தொடங்கி, உறுப்பினர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை எட்டியது, பின்னர் ஒரு கோடியை நெருங்கியது.

விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்து, சமத்துவம், சாதி, மதம், பாலின வேறுபாடுகளை நீக்குதல், மற்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பது போன்றவற்றை மையப்படுத்தினார். அதுமட்டுமல்லாது விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டையும், மதுரையில் 2வது மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்தினார். இருப்பினும் விஜயின் அரசியல் வருகை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜயகாந்தை போல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்… நம்ம தயாராகனும்! டிடிவி தினகரன் பேச்சு..!
தொடர்ந்து, அவர் சுற்றுப்பயணம் நடத்த இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நாளைக்கு 2 மாவட்டங்கள் என தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஐந்து வாரங்களுக்கு சுற்றுப்பயணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் வாரம் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாவது வாரம் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், மூன்றாவது வாரம் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் நடத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நான்காவது வாரம் திருப்பூர் ஈரோடு நீலகிரி மாவட்டத்திலும் ஐந்தாவது வாரம் திருப்பத்தூர் தர்மபுரியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: பவுன்சர்களின் அடாவடித்தனம்.. தவெக தொண்டர் பரபரப்பு புகார்.. FIR-ல் முதல் பெயராக விஜய் சேர்ப்பு..!!