சென்னை: திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு திருவண்ணாமலை அருகே நேற்று முன்தினம் நடைபெற்றது. வடக்கு மண்டல பொறுப்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலு ஏற்பாட்டில் நடந்த இந்த மாநாட்டுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, கிளை அளவில் இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் மாநாடு என்பதால் இது பெரும் முக்கியத்துவம் பெற்றது. இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினும் பொதுச்செயலர் துரைமுருகனும் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் இதற்கு உடனடியாக பதில் அளிக்கவில்லை என்றாலும், கட்சி தலைமை வருவாய் மாவட்ட அடிப்படையில் குறைந்தது 38 தொகுதிகளில் இளைஞரணி வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் கட்சி தலைமையிடம் சுமார் 40 தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: தி.மலையில் இளைஞரணி மண்டல மாநாடு! விஜயை வீழ்த்த உதயநிதி மாஸ்டர் ப்ளான்!! தவெகவுக்கு திமுக செக்!

இளைஞரணி நிர்வாகிகள் கூறுகையில், 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு உதயநிதி இளைஞரணி செயலராக பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர் ராஜா உள்ளிட்ட சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் கே.இ. பிரகாஷுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது இளைஞரணி அமைப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் நிர்வாகிகள் இளைஞரணியில் உள்ளனர். இது போன்ற வலுவான இளைஞரணி திமுகவுக்கு மட்டுமே உள்ளது என்று அவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.
மேலும், 2026 தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக இளைஞர்களை களமிறக்க உள்ளது. அதை எதிர்கொள்ள திமுக சார்பிலும் கூடுதலாக இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி உறுதியாக உள்ளார் என்று இளைஞரணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த மாநாடு 2026 சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு நடத்தப்பட்டுள்ளதாகவும், இளைஞரணியின் பலத்தை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: 50 இல்ல! 65 தொகுதிகள் சாதகம்! அமித்ஷா கைக்கு போன முழு லிஸ்ட்! பரபரப்பு ரிப்போர்ட்!