சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த ‘UmagineTN-2026’ உச்சி மாநாட்டின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர், தமிழகத்தின் டிஜிட்டல் புரட்சி மற்றும் வருங்கால இலக்குகள் குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "1997-லேயே இந்தியாவின் முதல் ஐ.டி கொள்கையைக் கொண்டு வந்தவர் கலைஞர். அந்த அடித்தளத்தில்தான் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொழில்நுட்பக் கோபுரத்தைக் கட்டமைத்து வருகிறார். தொழில்நுட்பத்தின் பலன்கள் அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்கு. அன்று கலைஞர் ஒவ்வொரு வீட்டிற்கும் டிவி வழங்கினார்; இன்று முதல்வர் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி வருகிறார். விளையாட்டுத் துறையிலும் 5,500 வீரர்களின் திறன்களை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கும் முறையை இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழகம் அறிமுகப்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அதிவேக இணைய வசதி மற்றும் டேட்டா சென்டர்களுக்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த மாநாட்டை நடத்தி வருவதன் மூலம், ஜனவரி மாதம் என்றாலே தொழில்நுட்ப உலகிற்குச் சென்னைதான் டாப் என்பதை உறுதி செய்துள்ளோம். இந்த ஆண்டு மாநாட்டின் ஒரு பகுதியாக 61 இடங்களில் நடத்தப்பட்ட விரிவுரைகள் மூலம் 20,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்களது கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியதும், கடந்த ஆண்டை விட இருமடங்கு பார்வையாளர்கள் வருகை தந்ததும் மிகப்பெரிய வெற்றியாகும்" என்றார். இசை, திரைப்படம் மற்றும் கேமிங் துறைகளில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். விழாவின் நிறைவாகப் பல முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதுடன், தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: பொங்கலுக்கு ஊருக்கு போக ரெடியா மக்களே..!! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
இதையும் படிங்க: விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தி! தவெக தலைவர் குறித்து பிரவீன் சக்கரவர்த்தி புகழாரம்!