இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தி.மு.க. தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக கட்சி வட்டாரங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனுடன், எதிர்காலத்தில் த.வெ.க. தலைமையிலான அரசில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு அரசியல் கூட்டணிகளில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தற்போது த.வெ.க. தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்த சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் மூத்த தலைவர் சுப்பராயன் ஆகியோர் தொடர்ந்து தி.மு.க.வுக்கு சாதகமாக கருத்து தெரிவித்து வருவதாகவும், இதன் மூலம் கட்சிக்குள் குழப்பம் உருவாக்கப்படுவதாகவும் கட்சி வட்டாரங்கள் குற்றம்சாட்டுகின்றன.
இதையும் படிங்க: கரூர் துயரம்...! அரசு வேலை வழங்குவதா..? பாதிப்பு பயங்கரமா இருக்கும்..! CPI எம். பி. சுப்புராயன் எச்சரிக்கை..!
தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பேசிய முத்தரசன், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை பாராட்டியதுடன், தி.மு.க.வுடனான நட்பு தொடரும் என தெரிவித்திருந்தார்.

அதேபோல், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியதை அதிகார துஷ்பிரயோகம் என சுப்பராயன் விமர்சித்திருந்தார். இத்தகைய கருத்துகள் கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்கும் வகையில் இருப்பதாக சில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓசூரில் இருந்து நடைபயணம் தொடங்கப்பட்டது. சில கிலோமீட்டர் சென்ற பின்னர் போலீசார் அதை தடுத்து நிறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் இணைந்து உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், தேவை ஏற்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடலாம் என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், எதிர்காலத்தில் த.வெ.க. அரசில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் சூழல் உருவாகலாம் என்றும், அப்போது தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் அமைச்சராக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏன் இப்படி..? உதயநிதி பேசியது அரசியல் பிழை..! சிபிஐ வீரபாண்டியன் அதிருப்தி..!!