நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில், அமைச்சர்கள் யாரும் நேரில் வந்து வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்காதது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடையேழு வள்ளல்களில் ஒருவராக போற்றப்படும் மன்னர் வல்வில் ஓரிக்கு, 1975-ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் சிலை அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் அரசு விழாவாக கொண்டாட உத்தரவிடப்பட்டது. அன்றைய முதலமைச்சர் கருணாநிதி நேரில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர் சில மாதங்களிலேயே திமுக அரசு கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் பின்னர் பதவியை இழந்ததாக ஒரு நம்பிக்கை பல ஆண்டுகளாக உள்ளூர் மக்களிடையே பரவியது. இதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லாவிட்டாலும், இந்த 'சென்டிமென்ட்' காரணமாக அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சிலைக்கு மாலை அணிவிப்பதை தவிர்த்து வருவதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்... மூதாட்டி கழுத்தறுத்து கொடூர கொலை..! நாமக்கல்லை உலுக்கிய கோரச்சம்பவம்..!!

இந்த ஆண்டுக்கான வல்வில் ஓரி அரசு விழா நேற்று தொடங்கியது. தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்ராஜ், லோகேஷ் தமிழ்ச்செல்வன், விஜயலட்சுமி ஆகிய மூன்று அமைச்சர்கள் இருப்பதால், இந்த முறை அவர்கள் செம்மேட்டிற்கு வந்து சிலைக்கு மாலை அணிவித்து பல ஆண்டுகளாக பேசப்படும் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மூன்று அமைச்சர்களில் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை. வழக்கம்போல் கிராம நிர்வாக உதவியாளர் தான் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து அரசு மரியாதையை செலுத்தினார்.
இதனால், "வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்தால் பதவி பறிபோகும்" என்ற பல ஆண்டுகளாக பேசப்படும் நம்பிக்கை மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. இருப்பினும், இந்த நம்பிக்கைக்கு உறுதியான வரலாற்று அல்லது அதிகாரப்பூர்வ ஆதாரம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், பல தசாப்தங்களாக தொடரும் இந்த நிகழ்வு மீண்டும் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'நான் சிறையைப் பார்த்தவன்'! எதற்கும் அஞ்ச மாட்டேன்! காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!