வேடசந்தூர் அருகே கிடா வெட்டிற்கு சென்ற சுற்றுலா வேன் அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலி - 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இதையும் படிங்க: பள்ளி மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு..!
திண்டுக்கல் மாவட்டம் கரூர் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் தேனி மாவட்டம் பூசாரி கவுண்டன்பட்டியை சேர்ந்த திராட்சை விவசாயிகள் 22 பேர் ஆடி அமாவாசையை முன்னிட்டு கிடா வெட்டுவதற்காக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள நாட்ராயன் கோயிலுக்கு ஒரு சுற்றுலா வேனில் சென்றுள்ளனர். வேனை ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டியுள்ளார்.
இந்த நிலையில் சுற்றுலா வேன் வேடசந்தூர் அய்யர்மடம் அருகே சென்று கொண்டிருந்தபோது தேனீர் அருந்துவதற்காக தேசிய நான்குவழிச் சாலையின் ஓரமாக உள்ள பேக்கரிக்கு செல்ல வேன் திரும்பியபோது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேன் ஓட்டுநர் ரஞ்சித் மற்றும் வாசகர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனில் இருந்த 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை வேடசந்தூர் ரோந்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய வேடசந்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிக்காமல் சென்ற லாரி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு திராட்சை விவசாயிகள் கிடா வெட்டிற்கு சென்ற வேன் விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெடித்து சிதறிய கார் டயர்...ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 உயிர்கள் பறிபோன சோகம்!