நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தருகிறார். இப்பேராலயம் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதங்களையும் சார்ந்த பக்தர்களும் வழிபடும் தலமாக திகழ்கிறது.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா வரும் 29ம் தேதி முதல் செப்டம்பர் 8 வரை 10 நாட்கள் விமரிசையாக நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: முடிந்தது தவெக மாநாடு.. பாரபத்தி பகுதியில் டிராஃபிக் ஜாம்.. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!
16-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளால் புகழ்பெற்ற இந்த பேராலயம், கிழக்கு நாடுகளின் 'லூர்து' என்று அழைக்கப்படுகிறது. விழா ஆகஸ்ட் 29 அன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திருப்பலி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி செப்டம்பர் 7 அன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறவுள்ளது. செப்டம்பர் 8 அன்று மாதாவின் பிறந்தநாள் சிறப்பு கூட்டு திருப்பலியுடன் கொண்டாடப்படும், இதற்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தலைமையேற்பார். இவ்விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.
இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளையும், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்கவுள்ளது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 29-ம் தேதி விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வேளாங்கண்ணி பேராலயம், வங்கக் கடலோர அழகுடன், மத நல்லிணக்கத்தின் சின்னமாக திகழ்கிறது. பக்தர்கள் நடைபயணமாகவும், முழந்தாளிட்டு வழிபாடு செய்யவும் வருவது வழக்கம். இந்த ஆண்டு விழா, ஆன்மிகத்தையும் பண்பாட்டையும் ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட நிகழ்வாக அமையும்.
இதையும் படிங்க: அறியாமையில் பேசுகிறார் விஜய்.. உடனடியாக ரியாக்ட் செய்த எடப்பாடி பழனிசாமி..!!