வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர், விஞ்ஞானி பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் விஞ்ஞானி பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கான சிறப்பு நேரடி ஆட்சேர்ப்பு முகாமை உடனடியாகத் தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கல்வி, நிர்வாகம் மற்றும் நிதி ஆகிய துறைகளில் தன்னாட்சியுடன் செயல்பட்டு வரும் இப்பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும் 2003ஆம் ஆண்டு 4 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 5 இளநிலைப் பட்டப்படிப்புகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 19 உறுப்புக் கல்லூரிகள், 15 வேளாண் அறிவியல் நிலையங்கள், 42 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் மையங்களுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் 10 இளநிலைப் பட்டப்படிப்புகள், 34 முதுநிலைப் பட்டப்படிப்புகள், 28 முனைவர் பட்டப்படிப்புகள் மற்றும் 3 பட்டயப் படிப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பள்ளிக்கரணை பேராபத்து...! சதுப்பு நிலக் கட்டிடம் கூடாது... வேல்முருகன் வலியுறுத்தல்..!!
பல்கலைக்கழகத்தில் சுமார் 600 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம், ஆலோசனை மற்றும் தொழில்நுட்பப் பரவல் நடவடிக்கைகளின் தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள வேல்முருகன், உதவிப் பேராசிரியர் மற்றும் விஞ்ஞானி பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மானியக்குழுவின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு நேரடி ஆட்சேர்ப்பு முகாமை உடனடியாகத் தொடங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!