ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அசாத்திய சாதனைகளைப் படைத்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டம், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய மூன்று போட்டிகளிலும் பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.முதலில் கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணியுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதைத் தொடர்ந்து மகளிர் 400 மீட்டர் தடை ஓட்ட இறுதிப் போட்டியில் 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் பெற்றார். இந்த நேரத்தில் அவர் இந்திய தடகள வரலாற்றில் நீண்டகாலமாக நிலைத்திருந்த ஒரு சாதனையை முறியடித்தார். 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி.டி. உஷா பதிவு செய்த 55.42 விநாடி தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்து புதிய தேசிய சாதனையை நிறுவினார். இதற்கு முன்பு 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதே நேரத்தை சமன் செய்திருந்த வித்யா, இம்முறை அதனைத் தாண்டி சென்றுள்ளார்.

இறுதியாக மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணியின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு தங்கப் பதக்கம் வெல்ல உதவினார். இதன் மூலம் ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்றார்.இந்த சாதனைகள் தமிழ்நாட்டில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உரிமைக்கு போராடும் மேகமலை மக்கள்..! நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்..! ஆதரவு கரம் நீட்டிய சீமான்.!!
பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் வென்றிருக்கும் வித்யா ராம்ராஜின் சாதனை அளப்பரியது என்றும், பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்திருப்பது தனித்துவமான மகுடமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் உலக தடகளப் போட்டிகளிலும் ஒலிம்பிக்கிலும் வித்யா பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் என்று சீமான் தெரிவித்தார். தமிழரின் புகழ் உலக அரங்கில் மேலும் ஓங்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!