தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி. ஜோசப் விஜய் இன்று மீண்டும் தாராபுரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ள அவர், ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் சென்று, பின்னர் சாலை வழியாக பல்வேறு பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.
தாராபுரம் தொகுதியில் ஏற்கனவே செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று வாக்கு சேகரித்தார். தற்போது தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளதால், கடைசி நாளில் மீண்டும் தொகுதிக்குள் நேரடியாக களமிறங்குகிறார்.
இதற்காக விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் செல்கிறார். தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் அவருக்காக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சாலை வழியாக சென்றால் வழியெங்கும் பொதுமக்கள் திரள்வதால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் ஹெலிகாப்டர் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தவெக கூட்டணியில் பாமக! விசிக வைத்த ‘செக்’! திருமாவளவன் தரப்பின் அதிரடி நிலைப்பாடு!

தாராபுரம் தொகுதிக்குள் சென்றதும், பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் நீண்ட தூர சாலை வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேட்டுக்கடை முதல் தாசர்புரம் வரையிலான சுமார் 114 கி.மீ. தொலைவில் பல இடங்களில் பொதுமக்களை சந்தித்து, வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவு கோர விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் விஜய்யை காண பொதுமக்கள் அதிக அளவில் திரளக்கூடும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விஜய் செல்லும் சாலைகளில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய பிரசாரம் முடிவடைந்ததும், அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவை நோக்கி தாராபுரம் தேர்தல் களம் நகர உள்ளது.
இதையும் படிங்க: தாராபுரம் பிரசாரம்! ரூட் மாறுகிறது முதல்வர் விஜய் செல்லும் பாதை! கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!