சென்னை பெரம்பூர் தொகுதி மக்களின் குறைகளை விரைவாக தீர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை நாளை (ஜூலை 13) திறந்து வைக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற அவர், திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தற்போது பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வருகிறார். தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக தொகுதிக்கு வருவதால், த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கத் தயாராகியுள்ளனர்.
சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன அலுவலகத்தில், முதலமைச்சருக்கென தனி அறை, கணினி வசதிகள் மற்றும் பொதுமக்களின் மனுக்களை பெற 10 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலக வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ‘மக்கள் சேவை தளம்’ என்ற பிரத்யேக மொபைல் செயலியையும் முதலமைச்சர் விஜய் அறிமுகப்படுத்துகிறார். பெரம்பூர் தொகுதி மக்கள் மின்சாரம், குடிநீர், சாலை, தூய்மை, கல்வி, மருத்துவம், அரசு நலத்திட்டங்கள், வீட்டு வசதி, வேலைவாய்ப்பு, சட்ட உதவி உள்ளிட்ட அனைத்து குறைகளையும் இந்த செயலி மூலம் நேரடியாக பதிவு செய்ய முடியும். புகார் பதிவு செய்யப்பட்ட உடனேயே அது எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்றடையும். அதே நேரத்தில் உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தியும் புகார்தாரரின் கைப்பேசிக்கு அனுப்பப்படும்.
இதையும் படிங்க: ஒருத்தரையும் விட மாட்டேன்!! அடுத்தடுத்து மாட்டப்போறீங்க! முதல்வர் விஜய் வார்னிங்! திமுக மாஜிக்கள் கலக்கம்!?

மேலும், புகார் எந்த நிலையில் உள்ளது என்பதையும் பொதுமக்கள் செயலி மூலமாகவே தொடர்ந்து கண்காணிக்கலாம். பெறப்படும் மனுக்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அவசர பிரச்சினைகளுக்கு அதிகபட்சம் 10 நாட்களுக்குள் தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அலுவலகம் திறக்கப்படுவதற்கு முன்பே அப்பகுதி மக்கள் நேரில் சென்று பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்தனர். அலுவலகம் எதிரே த.வெ.க. அரசின் திட்டங்களை விளக்கும் ஓவியங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தவெகவை வீழத்த திமுக - அதிமுக இணைவதில் தவறில்லை!! விஜய் பண்ணது மட்டும் நியாயமா? டிடிவி தினகரன் கேள்வி!