100 நாள் ஆட்சி... விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை துறை வாரியாக தொகுத்து அறிக்கையாக தயாரிக்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே 10ம் தேதி விஜய் முதல்வராக பதவியேற்றார். அப்போது ஊழல் மற்றும் லஞ்சத்தை சகித்துக் கொள்ள மாட்டேன் என அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை உருவாக்கம், கூட்டுறவு வங்கிகளில் ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெண்டர் ரத்து பின்னணியில் 10% கமிஷன்? முதல்வர் விஜய் வசம் உள்ள துறையில் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகவும், அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான சிறப்பு தொகுப்பு திட்டங்கள், பத்திரப்பதிவுத்துறையில் முறைகேடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள், சட்டவிரோத குவாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவையும் பட்டியலில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், போதைப்பொருள் தடுப்புக்காக தனிப்படை அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134 கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைகள், மத்திய அரசுடன் இணைந்து ஜல்ஜீவன் 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள், ஸ்ரீரங்கம் கீழவாசல் திறப்பு உள்ளிட்டவற்றையும் 100 நாள் செயல்பாடுகளில் சேர்க்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17ம் தேதி முதல்வர் விஜய் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு துறையும் மேற்கொண்ட பணிகள், அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தொகுக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
100 நாள் நிறைவையொட்டி வெளியாகும் இந்த பட்டியலில், அரசு தனது முக்கிய செயல்பாடுகளை எவ்வாறு முன்னிலைப்படுத்தப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகள்? அரசாணை இல்லாத நியமனங்கள்! தவெக அரசில் சர்ச்சை!