தமிழக அரசியலில் ஆட்சியமைப்பை சுற்றிய பரபரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்கொள்ள 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கட்டாயமில்லை என்ற தகவல் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவின் அடுத்தகட்ட நகர்வுகள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சட்டசபையில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத சூழலில், முதலில் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பது வழக்கமான நடைமுறையாக பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தவெகவுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இதனால் விஜய்க்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன் பின்னர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து மூத்த எம்எல்ஏ தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார். அவரது முன்னிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக்கொள்வார்கள். அதன் பிறகே சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
இதையும் படிங்க: விஜயை வீழ்த்த களமிறக்கப்படும் உதயநிதி ஸ்டாலினின் வலதுகரம்!! திமுக பிரம்மாஸ்திரம்! திருச்சி கிழக்கில் அதிரடி!

இந்த ஓட்டெடுப்பில் மொத்த உறுப்பினர்களின் பாதிக்கும் மேற்பட்டோர் ஆதரவு அவசியமில்லை என்பது தற்போது முக்கிய விவாதமாகியுள்ளது. ஓட்டெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மை கிடைத்தாலே அரசு வெற்றி பெற்றதாக கருதப்படும். அதாவது சில கட்சிகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தால், குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு நம்பிக்கை ஓட்டில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடுகளும் அரசியல் சூழ்நிலையை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது. முஸ்லிம் லீக் மட்டுமே தவெகவுக்கு ஆதரவு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. தேமுதிக தரப்பிலும் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு வெளியாகவில்லை.
அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்., மறைமுகமாக தவெகவுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தமிழக அரசியலில் அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: விஜய்க்கு டைம் குடுங்க..! ஆளுநர் நிர்பந்திப்பது முறையல்ல... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!