மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் 31 ஆண்டுகளாக மதிமுகவை நடத்தி வருவதாகவும் முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு போராடியதாகவும் தெரிவித்தார். தான் நீதிபதிகளை மதிப்பதாக கூறிய வைகோ, ஆனால் நீதிபதிகள் வரம்புக்குள் பேச வேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் தெரிவித்தார்.
புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய் பொதுப்பிரச்சனைகளில் தலையிட்டாரா அல்லது ஏதேனும் போராட்டங்கள் நடத்தினாரா என்றும் தனிப்பட்ட முறையில் விஜயை தான் மதிப்பதாகவும் கூறினார். யாரோடு கூட்டு சேர்ந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் உள்ளே நுழைய நினைப்பதாகவும் எந்த காலகட்டத்திலும் எந்த சக்தியாலும் நுழைய முடியாது எனவும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கர்வத்தோடும் அகந்தையோடும் திமுகவை துடைத்தெறிவோம் என அமித் ஷா பேசி வருவதாக கூறிய வைகோ, திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: “நாக்கை அடக்கி பேசுங்க அமித் ஷா...” - எங்கள உடைச்சி துடைச்சி போட்டுடுவீங்களா? - வைகோ ஆவேசம்...!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆசை, கனவு தனக்கு கிடையாது என்றும் தி.மு.க.-த.வெ.க. இடையே தான் போட்டி என சினிமாவில் பேசும் வசனங்களை போல் விஜய் பேசி வருகிறார் என்றும் அவர் கனவு நினைவாகாது என்றும் கூறினார். காகித கப்பலில் கரையை கடக்க முயல்கிறார் விஜய் என்று கூறிய வைகோ, ஆகாய வெளியில் மணக்கோட்டையை கட்டுகிறார் என்றும் அது வெறும் மண் கோட்டையாக தான் போகும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிருப்தியில் தனிக்கட்சி ஆரம்பித்த மல்லை சத்யா... பெயர் என்ன தெரியுமா?