விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான வடிவேலு-பவானி தம்பதியரின் இரண்டாவது மகள் ஹேமாவதி அல்லது ஹேமலதா என்ற ஏழு வயது சிறுமி, அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அக்டோபர் 11 ஆம் தேதி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு பெற்றோர் மற்றும் பாட்டியுடன் வீட்டில் தூங்கச் சென்றார்.
மறுநாள் அக்டோபர் 12 அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமி காணாமல் போயிருந்தார். வாசல் கதவு திறந்திருந்ததாகவும், அதிகாலை மூன்று மணியளவில் குழந்தை அழும் குரல் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாயின.சிறுமியின் பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள வயல்கள், கால்வாய்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மூன்று துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் எட்டு முதல் பத்து தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணியைத் தொடங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள், ட்ரோன்கள், மோப்ப நாய்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் உதவியுடன் கிணறுகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள், மலைப்பகுதிகள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சுமார் அறுநூறு செல்போன் அழைப்புப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அக்டோபர் 21 ஆம் தேதி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோர விபத்து..! ஸ்கேட்டிங் கனவுடன் சென்ற குடும்பம்! பிஞ்சுக் குழந்தை உட்பட பறிபோன உயிர்கள்..!!
சிபிசிஐடி டிஎஸ்பி கீதா மற்றும் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான குழு உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. சிறுமியின் பெற்றோர், பாட்டி மற்றும் உறவினர்களிடம் நீண்ட நேர விசாரணை நடத்தப்பட்டது. சிறுமி காணாமல் போய் பதினைந்து நாட்கள் ஆகிய நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் மேலும் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மயக்கமருந்து தெளித்து சிறுமியைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆழமாக ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து ரயில் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் கேண்டீன் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் பரிசீலிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: அதெப்படி.? சிறுமி காணாமல் போனதற்கு தவெக அரசு பொறுப்பேற்க முடியாது..! வைகோ திட்டவட்டம்.!!