ஜனநாயகத் திருவிழாவான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றியம் ரெட்டிபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள இந்த மாதிரி வாக்குச்சாவடியின் நுழைவாயிலில், "வாக்களிக்க வருமாறு அன்புடன் அழைக்கும் அழைப்பிதழ்" என்ற வாசகத்துடன் கூடிய வரவேற்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
மங்கலச் சின்னமான வாழை மரங்கள் கட்டப்பட்டு, உட்புறம் முழுவதும் திருமண வீடுகளில் செய்யப்படுவது போன்ற வண்ணமயமான தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாக்களித்து வரும் மக்கள் அந்த நினைவைப் போற்றும் வகையில் புகைப்படம் எடுத்துக்கொள்ள பிரத்யேகமாக 'செல்பி பாயிண்ட்' அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??
மேலும், வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்கும்போது சோர்வடையாமல் இருக்க பாரம்பரிய மூங்கில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
வெயிலைச் சமாளிக்க சர்பத்:
இது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் முனீஸ் கூறுகையில், "வாக்காளர்கள் அனைவரும் எவ்வித சிரமமுமின்றி உற்சாகமாக வந்து வாக்களிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நாளை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், வாக்காளர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இனிப்பு மற்றும் நன்னாரி சர்பத் வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," எனத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கடமையை ஒரு கொண்டாட்டமாக மாற்றியுள்ள இந்த மாதிரி வாக்குச்சாவடி, எடப்பாடி தொகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!