சென்னை: பெண்ணின் கண்ணியம் மற்றும் தனியுரிமையை பொது இடத்தில் அவமானப்படுத்திய வழக்கில் பிரபல யூடியூபர் முக்தார் அகமதுவை கைது செய்ய முடியாமல் போலீசார் தொடர்ந்து திணறி வருகின்றனர்.
ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் அலிஷா அப்துல்லா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா மற்றும் ‘மை இந்தியா’ என்ற யூடியூப் சேனலை நடத்தும் முக்தார் அகமது ஆகியோர் தன்னைப் பற்றி அவதூறாகவும் இழிவான வகையிலும் வீடியோ வெளியிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, பெண்ணின் கண்ணியத்தை புண்படுத்தும் வகையிலும், தனது இரட்டை குழந்தைகளைப் பற்றி வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசியதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மாணிக்கம் தாகூர் Vsபிரவீன் சக்கரவர்த்தி! தமிழக காங்., தலைவர் பதவிக்கு கடும் மோதல்!

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சமூக ஊடக விசாரணைப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளியான முக்தார் அகமதுவை இன்னும் கைது செய்ய முடியவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்தார் அகமது தி.மு.க. அனுதாபி என்பதால், ஒரு அரசியல் கட்சி தலைவரின் ஆதரவுடன் அவர் ஒளிந்திருப்பதாகவும், அவருக்கு முன்ஜாமீன் பெறும் வரை கைது செய்யக் கூடாது என போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆட்சியில் இவர் மீது பல புகார்கள் இருந்தும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெண்கள் மீதான அவதூறு மற்றும் சமூக ஊடக தவறான பயன்பாடு குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. அலிஷா அப்துல்லா தனது புகாரில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
போலீசார் முக்தார் அகமதுவை விரைவில் கைது செய்ய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான அவதூறு பேச்சுகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உதயநிதி வியூக வகுப்பாளர் விலகல்! தவெக + காங்., கூட்டணிக்கு தாவல்! விஜய்க்கு ஆதரவாக பணியாற்ற முடிவு!