டெல்லி: சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சர்கள் பலர் தனித்தனி கார்களில் பயணிக்காமல் குழுவாக கார் பகிர்ந்து பயணித்து அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த நடவடிக்கை டெல்லியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்காசியப் பகுதியில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். சொந்த வாகனங்களைத் தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறும், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புள்ள நிறுவனங்கள் அதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதற்கு தானே முன்னுதாரணமாக இருக்கும் வகையில் பிரதமர் தனது கான்வாயில் உள்ள கார்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்தார். அவரைப் பின்பற்றி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இருசக்கர வாகனத்தில் பயணிக்கத் தொடங்கினார். சில மாநில முதல்வர்கள் மின் வாகனங்களுக்கு மாறினர். டெல்லியில் பல அமைச்சர்கள் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தும் அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: முப்படை தலைமை தளபதியாக தமிழர் ராஜா சுப்பிரமணியன் பதவியேற்பு!! இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதி!

இந்நிலையில், ‘சேவா தீர்த்’ பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு வந்த அமைச்சர்கள் தனித்தனி கார் பயன்பாட்டைக் குறைத்தனர். நிதின் கட்கரி, ஜே.பி. நட்டா, கிரண் ரிஜிஜு, ராஜீவ் ரஞ்சன் சிங், மனோகர் லால் கட்டார், பிரஹலாத் ஜோஷி, கஜேந்திர சிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, சிவராஜ் சிங் சவுகான், சி.ஆர். பாட்டீல், கிஷன் ரெட்டி உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவாக இணைந்து வெவ்வேறு கார்களில் பயணித்து வந்தனர்.
முந்தைய அமைச்சரவை கூட்டத்தின்போது, “ஒரே இடத்துக்கு செல்லும்போது எத்தனை பேர் ஒரே காரில் வருகிறீர்கள்?” என்று பிரதமர் மோடி அமைச்சர்களிடம் நேரடியாகக் கேட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் இந்த முறை கார் பகிர்ந்து பயணித்தது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் சிக்கனம், அந்நிய செலாவணியை மிச்சப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இந்த நடவடிக்கை முக்கியத்துவம் அளிப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமரின் இந்த அழைப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வாயு அஸ்த்ரா-1 100 கி.மீ., இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்! ஏவுகணை சோதனை வெற்றி!