அதிமுக - பாஜக இடையே கூட்டணி பிளவு பட்டிருந்த நிலையில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்த போது மீண்டும் தங்களது கூட்டணியை உறுதிப்படுத்தினார். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்தே சந்திக்கின்றன. எனவே இரு கட்சிகளும் தொடர்ந்து பல வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, பூத் கமிட்டி அமைப்பது, துண்டு பிரசுரங்கள் வழங்குவது, கட்சியை பலப்படுத்துவது, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குவது என தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், ஜூலை 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்குகிறது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மற்றும் பேராவூரணி தொகுதிகள் அடங்குகின்றன.
இதையும் படிங்க: இரட்டை இலை யாருக்கு? தொடரும் பிரச்சனை..தேர்தல் ஆணையத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக்கு கூறப்படுகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்திற்கான பாடல் மற்றும் இலட்சியினை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தேர்தலுக்கான பாடலை வெளியிட்டார். இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் வரும் ஏழாம் தேதி முதல் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். இதன் காரணமாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில தினங்களில் பாதுகாப்பு பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க ஆண்டுக்கு ஆறு கோடி ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நொந்து போன மா விவசாயிகள்.. உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.. இபிஎஸ் வலியுறுத்தல்..!