ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் கனவுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் அடுத்த சீசனுக்கான அணியில் முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
2026 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளைப் பெற்றது. புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்ததால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை. இதையடுத்து அடுத்த சீசனில் அணியை மேலும் வலுப்படுத்தும் பணிகளில் நிர்வாகம் இறங்கியுள்ளது.
கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட ஹேமங் பதானிக்கு பதிலாக தற்போது கங்குலி பொறுப்பேற்கிறார். 2019-ம் ஆண்டிலேயே டெல்லி அணியுடன் கங்குலியின் பயணம் தொடங்கியது. அப்போது அவர் அணியின் ஆலோசகராக இணைந்தார். பின்னர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் கிரிக்கெட் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய மகளிர் அணிக்கு ஷாக்...! தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய ஹர்மன்பிரீத் கவுர்..!!

தற்போது மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பியிருப்பது குறித்து கங்குலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் தனக்கு மிகவும் நெருக்கமான அணி என்றும், வரும் சீசனில் வலுவான மற்றும் அச்சமற்ற அணியை உருவாக்குவதுடன், வீரர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட்டின் மற்றொரு முன்னாள் நட்சத்திரமான யுவராஜ் சிங், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த நியமனம் தொடர்பாக அணி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
மேலும், டெல்லி அணியின் முக்கிய வீரரான ரிஷப் பந்த், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு திரும்பியிருப்பது ஏற்கெனவே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கங்குலி தலைமைப் பயிற்சியாளர், ரிஷப் பந்த் அணியில் முக்கிய வீரர் என புதிய கட்டமைப்புடன் டெல்லி கேப்பிடல்ஸ் அடுத்த ஐபிஎல் சீசனை எதிர்கொள்ள உள்ளது. இதனால், இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத டெல்லி அணியின் அடுத்த முயற்சி ரசிகர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹாங்காங் சிக்சஸ்..!! கேப்டனாக புவனேஷ்வர் குமார்.. இந்திய அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!