இந்தியாவின் இளம் செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக், மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த 19 வயது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆவார். இவர் 2025 டாடா ஸ்டீல் சேலஞ்சர்ஸ் போட்டியில், கிராண்ட்மாஸ்டர் பெஞ்சமின் போக் உடனான கடினமான ஆட்டத்தில் தனது பாதுகாப்பு ஆட்டத்திறன் மற்றும் நிதானத்தை நிரூபித்தார்.

இருப்பினும், 2024 டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியில், நெதர்லாந்தில் பார்வையாளர்களின் பாலின பாகுபாடு மற்றும் அவரது உடை, தோற்றம் குறித்த கருத்துகளால் திவ்யா தொந்தரவுக்கு உள்ளானதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: NO.1 வீரர் கார்ல்சன் மீண்டும் தோல்வி.. கெத்து காட்டும் தமிழக இளம் நட்சத்திரம்..!!
இந்நிலையில் ஜார்ஜியாவின் பதுமி நகரில் நடைபெற்று வரும் FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் (19) சாதனை படைத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் சீனாவின் முன்னாள் உலக சாம்பியன் டான் ஜோங்யியை 1.5-0.5 என்ற கணக்கில் வீழ்த்தி, உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், 2026-ல் நடைபெறும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கும் திவ்யா தகுதி பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் அவரது அபாரமான ஆட்டத்திறன், மூலோபாய திறன் மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் திறமையை வெளிப்படுத்தியது.
அரையிறுதியில் டான் ஜோங்யிக்கு எதிரான ஆட்டத்தில், திவ்யாவின் துல்லியமான நகர்வுகள் மற்றும் பொறுமையான அணுகுமுறை வெற்றிக்கு வழிவகுத்தது. இந்த வெற்றி, இந்திய செஸ் உலகில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

மற்றொரு அரையிறுதியில், இந்தியாவின் கோனேரு ஹம்பி, சீனாவின் டிங்ஜி லீயுடன் டிராவில் முடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேற டை-பிரேக்கரில் மோத உள்ளார். திவ்யாவின் இந்த சாதனை, இந்திய இளம் வீராங்கனைகளுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.
இதனிடையே தன்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி, இந்த வெற்றி எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று திவ்யா தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டியில் திவ்யாவின் ஆட்டம், இந்தியாவுக்கு மற்றொரு பெருமையைப் பெற்றுத் தரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதுமட்டுமின்றி இந்தியாவின் முன்னணி இளம் செஸ் வீராங்கனைகளில் ஒருவராக விளங்கும் திவ்யா, தனது சாதனைகள் மற்றும் உறுதியான மனோபாவத்தால் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வருகிறார்.