இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் அடித்திருந்தது. ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தலா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! பிசிசிஐயின் வருமானம் இத்தனை கோடியா..!!
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தை தொடர முடியாமல் வெளியேறினார். இந்த சம்பவம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
37 ரன்கள் எடுத்திருந்த பண்ட், கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றபோது, பந்து அவரது வலது காலில் பலமாக தாக்கியது. உடனடியாக வலியில் துடித்த பண்ட், காலில் வீக்கமும், இரத்தக்கசிவும் ஏற்பட்டதால் மருத்துவ உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
"ரிஷப் பண்ட் முதல் நாளில் பேட்டிங் செய்யும் போது வலது காலில் காயம் அடைந்தார். அவர் ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது," எனத் பிசிசிஐ (BCCI) தெரிவித்துள்ளது.

இந்தத் தொடரில் ஏற்கெனவே மூன்றாவது டெஸ்டில் விரல் காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் செய்ய முடியாமல் போன பண்ட், இந்தப் புதிய காயத்தால் மீண்டும் சவாலை எதிர்கொள்கிறார். இந்நிலையில் ரிஷப் பண்டின் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, "மான்செஸ்டர் டெஸ்டின் முதல் நாளில் வலது காலில் காயம் ஏற்பட்ட ரிஷப் பண்ட், போட்டியின் மீதமுள்ள நாட்களில் விக்கெட் கீப்பிங் பணிகளைச் செய்ய மாட்டார். துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராகப் பொறுப்பேற்பார். காயம் இருந்தபோதிலும், ரிஷப் பண்ட் அணியுடன் இணைந்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் அவர் பேட்டிங் செய்வார்" என்று அறிவித்துள்ளது.
பண்ட் இந்தத் தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் சிறப்பாக விளையாடி வருவதால், அவரது இந்தக் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவரது மருத்துவ அறிக்கை மற்றும் மீட்பு நிலை குறித்து அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: இறுதி சுற்றில்... அசத்தும் இளம் செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்..!!