அபிஷேக் நாயர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போது பயிற்சியாளராக பணியாற்றி வரும் பன்முக ஆளுமையாளர். 1978ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பிறந்த இவர், மும்பை அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் முக்கிய பங்காற்றியுள்ளார். வலதுகை பேட்ஸ்மேனாகவும், மிதவேகப் பந்துவீச்சாளராகவும் விளையாடிய இவர், இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் (2006-2009) பங்கேற்றார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 99 முதல்-தர போட்டிகளில் 5,749 ரன்களும், 173 விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், புனே வாரியர்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் துணைப் பயிற்சியாளராக இருந்த அபிஷேக், அந்த அணியின் ஐபிஎல் வெற்றிக்கு முக்கிய காரணமாக பாராட்டப்பட்டார்.
இதையும் படிங்க: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இந்திய வீராங்கனை.. அட இவரா..!!
தொடர்ந்து 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், ஆனால் 2025 ஏப்ரலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியைத் தொடர்ந்து பிசிசிஐ அவரை பொறுப்பிலிருந்து நீக்கியது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2026 சீசனுக்கு முன்னதாக உ.பி. வாரியர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதேநேரம் இவர் KKR உடனான தனது பயிற்சியாளர் பணியையும் தொடர்கிறார்.
இவரது பயிற்சியில் வருண் சக்ரவர்த்தி போன்ற வீரர்கள் திறமையை மேம்படுத்தியுள்ளனர். ஏற்கனவே அபிஷேக் நாயர், இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டவர் என்பதால் இவரது அனுபவம் உ.பி.வாரியர்ஸ் அணிக்கு நிச்சயம் வலுவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு முன்னதாக உ.பி. வாரியர்ஸ் அணிக்கு ஜான் லூயிஸ் என்பவர் பயிற்சியாளராக இருந்தார். இவருக்கு கீழ் உ.பி. வாரியர்ஸ் அணி WPL 2023 இல் பிளேஆஃப்களை எட்டிய போதிலும், 2024 சீசனில் நான்காவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறத் தவறியது. இந்த சூழலில் நாயரின் நியமனம் அணியின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி. வாரியர்ஸ் அணியின் உரிமையாளர்கள், நாயரின் அனுபவமும் தலைமைத்துவமும் அணியை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நியமனம் குறித்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. WPL 2026 இல் உ.பி. வாரியர்ஸ் அணி, நாயரின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சரிந்தது இமயம்..!! மல்யுத்த உலகின் ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மறைவு..!!