இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி (Veda Krishnamurthy), கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு திறமையான வலதுகை பேட்ஸ்மேன் மற்றும் லெக்-பிரேக் பந்துவீச்சாளர் ஆவார். 1992 அக்டோபர் 16 இல் பிறந்த இவர், 2011 ஆம் ஆண்டு ஜூன் 30இல் டெர்பியில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 18 வயதில் 51 ரன்கள் குவித்து சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

48 ஒருநாள் போட்டிகளில் 829 ரன்களும், 76 டி20 போட்டிகளில் 875 ரன்களும் எடுத்துள்ள இவர், 2017 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2020 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் இறுதிப்போட்டி பயணத்தில் முக்கிய பங்காற்றினார்.
இதையும் படிங்க: ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த சுப்மன் கில்!!
வேதா, மூன்று வயதில் தெருக் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி, 12 வயதில் கராத்தேயில் கருப்பு பெல்ட் பெற்றவர். 13 வயதில் கர்நாடக கிரிக்கெட் நிறுவனத்தில் பயிற்சி பெற்று தனது திறமையை வளர்த்துக் கொண்டார். 2017-18 பிக் பாஷ் லீக்கில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடினார். 2021இல் தனது தாயார் மற்றும் சகோதரியை கோவிட்-19 தொற்றால் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானாலும், கிரிக்கெட்டில் தனது பங்களிப்பை தொடர்ந்தார். 2022 இல் கிரிக்கெட் வீரர் அர்ஜுன் ஹொய்சாலாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இந்நிலையில் 124 சர்வதேச போட்டிகளில் 1704 ரன்கள், 10 அரைசதங்கள் மற்றும் 58 கேட்ச்களுடன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் வேதா கிருஷ்ணமூர்த்தி. 32 வயதான வேதாவின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின்னர் வந்த இந்த முடிவு, அவரது 14 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தின் முடிவை குறிக்கிறது. தனது அறிக்கையில், கிரிக்கெட் மூலம் பெற்ற அனுபவங்களுக்கு நன்றி தெரிவித்த அவர், எதிர்காலத்தில் பயிற்சியாளர் அல்லது வர்ணனையாளர் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வாரியமும் அவரது பங்களிப்பை பாராட்டியுள்ளது.
இதையும் படிங்க: மாசம் ரூ.4 லட்சம் கொடுக்க சொன்ன நீதிமன்றம்.. அதெல்லாம் போதாது.. ஷமியின் மனைவி ஹாசின் அதிரடி!!