சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 26-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அபார வெற்றி பெற்றது. நடப்புத் தொடரில் தனது சொந்த மைதானத்தில் விளையாடிய 4 போட்டிகளிலும் வென்றிருந்த ஆர்சிபி, இன்று முதல் தோல்வியைச் சந்தித்தது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, டெல்லியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஃபில் சால்ட் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். விராட் கோலி (19 ரன்கள்), தேவ்தத் படிக்கல் (18 ரன்கள்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆர்சிபி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. அக்சர் படேல் (2/18) மற்றும் குல்தீப் யாதவ் (2/32) ஆகியோர் ரன் வேகத்தை மிகச்சிறப்பாகக் கட்டுப்படுத்தினர்.
176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்குத் தொடக்கத்தில் பின்னடைவு ஏற்பட்டது. ஆர்சிபி பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார் (3/26). கேஎல் ராகுல் (57 ரன்கள்) மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (60* ரன்கள்) ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.
இதையும் படிங்க: CSK அணிக்கு முக்கிய பின்னடைவு..!! IPL தொடரிலிருந்து விலகும் கலீல் அகமது..!! காரணம் இதுதானாம்..!!

கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. ரோமாரியோ ஷெப்பர்ட் வீசிய அந்த ஓவரில் டேவிட் மில்லர் முதல் மூன்று பந்துகளிலேயே இரண்டு இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ஒரு பந்து மீதமிருந்த நிலையில் வெற்றியை உறுதி செய்தார். அவர் 10 பந்துகளில் 22* ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சொந்த மைதானத்தில் முதல் தோல்வியைச் சந்தித்தாலும், ஆர்சிபி அணி 8 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.
இதற்கு முன் சின்னசாமி மைதானத்தில் விளையாடிய 4 போட்டிகளிலும் (சிஎஸ்கே, எஸ்ஆர்ஹெச், எல்எஸ்ஜி மற்றும் எம்ஐ அணிகளுக்கு எதிராக) வென்றிருந்த ஆர்சிபிக்கு, இன்று டெல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதையும் படிங்க: லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!