இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் இன்று ஒரு பொற்காலமாகப் பதிவாகியுள்ளது. 91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில், முன்னாள் சாம்பியனான பெங்கால் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஜம்மு-காஷ்மீர் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 1959-60 சீசனில் முதல்முறையாகப் பங்கேற்ற அந்த அணி, சுமார் 67 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு இந்த இமாலய வெற்றியை எட்டியுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் அகீப் நபி இந்தப் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பெங்கால் அணியின் பேட்டிங் வரிசையைச் சிதறடித்தார். பெங்கால் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 99 ரன்களுக்குச் சுருண்டது. இதன் விளைவாக ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 126 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வன்ஷஜ் சர்மா (43* ரன்கள்) மற்றும் ஐபிஎல் நட்சத்திரம் அப்துல் சமத் (30* ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், ஆட்டத்தின் 4-வது நாளிலேயே ஜம்மு-காஷ்மீர் அணி வெற்றியை உறுதி செய்தது. வன்ஷஜ் சர்மா சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடித்தந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டி20 உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறிய ஆஸ்திரேலியா!
ஜம்மு-காஷ்மீர் அணியின் கேப்டன் பரஸ் டோக்ரா , ரஞ்சி கோப்பை வரலாற்றில் 10,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற தனிப்பட்ட சாதனையையும் இந்தப் போட்டியின் போது படைத்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் இர்பான் பதான் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் அணியின் வீரர்களுக்குத் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். வரும் பிப்ரவரி 24 முதல் 28 வரை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், ஜம்மு-காஷ்மீர் அணி பலம் வாய்ந்த கர்நாடக அணியை எதிர்கொள்ள உள்ளது.
இதையும் படிங்க: U-19 உலகக்கோப்பை சாம்பியன்: தமிழக வீரர்களுக்கு தலா ₹5 லட்சம் பரிசு!