இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (CSKCL) நிறுவனத்தின் தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான என். சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மகள் ரூபா குருநாத் அண்மையில் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனங்கள் வரவிருக்கும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் (AGM) பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு விடப்பட உள்ளதாக நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

என். சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) முன்னாள் தலைவராகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த இவர், 2008ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணியை வாங்கியதிலிருந்து அதன் வெற்றிகரமான பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.
இதையும் படிங்க: என் தெய்வத்துக்கே மாறுவேஷமா..!! தரவரிசையில் 8வது இடத்திற்கு சரிந்த இங்கிலாந்து அணி..!
2014இல், பிசிசிஐ விதிமுறைகளால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, சி.எஸ்.கே அணியின் உரிமை சி.எஸ்.கே.சி.எல் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் சீனிவாசன் மற்றும் ரூபாவின் பங்குகள் டிசம்பர் 2024-ல் அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட பின்னர் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் சீனிவாசனின் பங்கு உல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டாலும், சி.எஸ்.கே.சி.எல் நிறுவனத்தில் அவரது குடும்பத்தின் கட்டுப்பாடு தொடர்கிறது.
நிதியாண்டு 2025இல், EWS ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 47.08% பங்குகளை வைத்திருக்க, சீனிவாசன் 0.11%, அவரது மனைவி சித்ரா சீனிவாசன் 0.03%, மற்றும் ரூபா குருநாத் 0.01% பங்குகளை வைத்திருக்கின்றனர். மேலும், சி.எஸ்.கே நிறுவனம் முதல் முறையாக 2025ஆம் நிதியாண்டில் ஈவுத்தொகை அறிவிக்க உள்ளதாகவும், கடன் வரம்பை ₹500 கோடியிலிருந்து ₹750 கோடியாக உயர்த்துவதற்கு பங்குதாரர்களின் ஒப்புதலை நாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் 2025 சீசனில் சி.எஸ்.கே அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றாலும், அடுத்த சீசனில் வலுவான மறுபிரவேசம் செய்யும் என்ற நம்பிக்கையை நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. சீனிவாசனின் தலைமையில், சி.எஸ்.கே அணி தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் சென்னை, ஜோபர்க், டெக்ஸாஸ், சூப்பர் கிங்ஸ் அணிகளை நிர்வகிக்கும் அமைப்பாக இது இருக்கும் நிலையில் இதன் இயக்குனராக சீனிவாசனின் மகள் ரூபா அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. பரிசுத்தொகையை அறிவித்த ICC..!!